சனி, 10 செப்டம்பர், 2011

யாருக்குப் பரிசு?

ஒரு ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார்.
பாறைகள் நிரம்பிய காடு அது.
ஆசிரியர் மாணவர்களிடம் இங்கு பல பாறைகளை இருக்கின்றன. இதில் ஏதாவது ஒரு பாறையை எடுத்து உருத்தெரியாமல் செய்ய முடியுமா? என்று கேட்டார். உருத் தெரியாமல் செய்பவருக்குத் தகுந்த பரிசு அளிக்கப்படும் என்றார்.
முதலில் ஒரு மாணவன் முன் வந்தான்.
அவன் ஆசிரியரிடம், “எனக்கு ஒரு வெடிகுண்டும் தீப்பெட்டியும் வேண்டும்” என்றான்.
அவனிடம் வெடிகுண்டும் தீப்பெட்டியும் அளிக்கப்பட்டது.
அவன் பாறைக்கு அடியில் வெடிகுண்டை வைத்து தீப்பெட்டியிலிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த வெடிகுண்டைப் பற்ற வைத்தான்.
அந்தப் பாறை சுக்குநூறாக வெடித்துச் சிதறியது.
ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.
அடுத்து ஒரு மாணவன் வந்தான் அவன் மண்வெட்டி வேண்டுமென்று கேட்டான்.
அவனிடம் மண்வெட்டி அளிக்கப்பட்டது.
அவன் அந்த இடத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டி அதில் ஒரு பாறையைத் தள்ளிவிட்டு மண்ணைக் கொண்டு மூடினான்.
பாறை இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
ஆசிரியர் மகிழ்ச்சியடைந்து அவனைப் பாராட்டினார்.
மூன்றாவதாக ஒரு மாணவன் முன் வந்தான்.
அவன் சுத்தியல், உளி வேண்டுமென்றான்.
அவன் கேட்டது அளிக்கப்பட்டது.
அவன் ஒரு பாறையைத் தேர்வு செய்தான். அதைச் செதுக்கிச் செதுக்கி ஒரு புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையை உருவாக்கி விட்டான்.
ஆசிரியரின் பாறையை உருத் தெரியாமல் செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு
ஒருவன் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தான்.
இன்னொருவன் பூமிக்குள் குழி தோண்டிப் போட்டு மறைத்தான்.
மற்றவன் உளி சுத்தியலுடன் அதை சிலை உருவிற்கு மாற்றி விட்டான்.
இவர்கள் மூவரில் பரிசு யாருக்கு?
ஆசிரியர் மூன்றாமவனுக்குப் பரிசு வழங்கப் போவதாகச் சொன்னார்.
வெடிகுண்டு கொண்டு பாறையை அழித்து விட்டான் அது அழிவு சக்தி.
குழிதோண்டி பாறையை பூமிக்குள் போட்டு மறைத்து விட்டான். அதனால் பயன் ஏதுமில்லை.
ஆனால் உளி, சுத்தியலுடன் பாறையை செதுக்கி சிலையாக உருவாக்கிய ஆக்க சக்திக்குப் பரிசு என்றார்.
அப்போது அந்த பரிசுக்குரிய மாணவன் சொன்னான்;
இந்தப் பரிசுக்கு உகந்தவன் நானில்லை. அந்தப் பாறைக்குள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் சிலை இருந்தது. அந்தப் பாறையின் மற்ற பகுதிகள் அதை மூடிக் கொண்டிருந்தது. வேண்டாத பாறைகளை நீக்கினேன். அவ்வளவுதான்.
அவனுடைய அடக்கமான பதிலைக் கண்டு அனைவரும் பாராட்டினர். அவனே பரிசுக்குரியன் என்று பரிசையும் அளித்தனர்.

சனி, 16 மே, 2009

நந்தவனம்


மாலதி டீச்சர் வர ஆரம்பித்ததிலிருந்து அந்தப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் மிகவும் சுவாரஸ்யமானதாய் மாறிவிட்டன. ஒவ்வொரு வாரமும் அவர் தன்னுடைய வகுப்பில் மாணவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவார். அதில் அவர்களின் மனதில் ஆழமாய் பதியும் வண்ணம் ஒரு போதனையும் வைத்திருப்பார். அடுத்து அவரின் வகுப்பு எப்போது வரும் என்று ஏங்கும்படி செய்திடுவார். இந்த வாரமும் வகுப்பறைக்குள் நுழைந்த மாலதி டீச்சர் மாணவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

""குழந்தைகளே! நான் இன்னைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன். ஒரு ஊர்ல ஒரு நந்தவனம் இருந்துச்சு. அந்த நந்தவனத்துல நிறையப் பூக்கள் இருந்துச்சு. பல வண்ணங்கள்ல பூத்துக் குலுங்குன அந்தப் பூக்களால அந்த நந்தவனம் பார்க்க அழகா இருந்துச்சு. அந்த வழியா போனவங்க எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு அந்த நந்தவனத்தோட அழகுல மனசைப் பறிகொடுத்துட்டுப் போவாங்க. இதனால, அந்த நந்தவனத்துல இருந்த பூக்கள் எல்லாத்துக்கும் கர்வம் வந்திடுச்சு. இந்த நந்தவனத்தோட அழகுக்கு நாமதான் காரணம்னு அதுங்க ஒவ்வொன்னும் நினைக்க ஆரம்பிச்சிடுச்சு. அதனால, ஒரு பூ இன்னொரு பூக்கிட்ட தன்னைப் பற்றி உயர்வாயும், அடுத்ததப் பத்தி இகழ்ந்தும் பேச ஆரம்பிச்சிடுச்சு!''

""ரோஜாப்பூ மல்லிகைப் பூக்கிட்ட சொல்லுச்சு. "பூக்களின் ராஜா நான்தான்! எந்த விருந்து விசேஷம்னாலும் மனிதர்கள் என்னைத்தான் பயன்படுத்துவாங்க. வைபவங்களின் போது என்னால் தொடுக்கப்பட்ட மாலைகளுக்குத்தான் முதல் இடம். நான் கௌரவச் சின்னம். கண்ணைப் பறிக்குற பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குற என்னாலதான் இந்த நந்தவனமே அழகா காட்சியளிக்குது' அப்படின்னுச்சு!

அதுக்கு மல்லிகைப் பூ, "நீ வேனா பூக்களோட ராஜாவா இருக்கலாம். ஆனா, பூக்களோட ராணி நான்தான்! உனக்கு விருந்து விசேஷத்தப்பதான் மதிப்பு. எனக்கு எல்லா நாளும் மதிப்பு. பெண்கள் தினமும் என்னைத்தான் விரும்பி அவங்களோட தலைல சூடிக்கிறாங்க. என்னோட மணத்துக்கு மயங்காதவங்களே கிடையாது. செடில கொத்து கொத்தா பூத்துக் குலுங்குற என்னோட வெண்ணிற மொட்டுக்களாலத்தான் இந்த நந்தவனமே பளீர்னு அழகாத் தெரியுது' அப்படினுச்சு! இதுங்க ரெண்டும் பேசிக்கிட்டிருக்குறத கேட்ட செம்பருத்திப் பூ சொல்லுச்சு! "நீங்க ரெண்டு பேரும் பூக்களோட ராஜா ராணியா இருக்கலாம். ஆனா மருத்துவ ரீதியா மனுஷங்களுக்கு அதிகம் பயன்படறது நான்தான்! அழகான குழல் வடிவத்துல செடி முழுக்க செக்கச் செவேல்னு பூத்துக்குலுங்குற என்னாலதான் இந்த நந்தவனமே அழகாத் தெரியுது அப்படின்னுச்சு!''

""இப்படி ஒவ்வொரு பூவும் தங்களுக்குள் நான்தான் அழகு, நான்தான் அழகுன்னு சண்டை போட்டுச்சுங்க. ஒரு கட்டத்துல சண்டை முத்திப் போயி நம்மளைப் படைச்ச கடவுள் கிட்டயே போயி நம்மில் யார் அழகுன்னு கேட்டுக்கலாம்னு முடிவு பண்ணி கடவுள்கிட்ட போச்சுங்க. கடவுள் சிரிச்சாரு. அவர் சொன்னாரு! "பூக்கள்ல உயர்ச்சி,

தாழ்ச்சி கிடையாது. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு விதத்துல அழகுதான். நீங்க எல்லாரும் ஒவ்வொரு காரணத்துக்காக என்னால இந்த பூமில படைக்கப்பட்டிருக்கீங்க. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் உங்களை கஷ்டப்பட்டு பராமரிச்சுட்டு வர்ற தோட்டக்காரனோட மனசு கோணாதபடிக்கு நல்லபடியா வளர்ந்துட்டு வர்றதுதான்' அப்படின்னாரு! பூக்களும் சரின்னு சமாதானமாகி தங்களோட இடத்துக்கு திரும்பிப் போச்சுங்க!'' என்று மாலதி டீச்சர் கதையைச் சொல்லி முடித்தார்.

தன் முகத்தையே அபூர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்து, ""குழந்தைகளே! இந்தக் கதை மூலமா நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியுதா? யாராவது சொல்ல முடியுமா?'' என்று கேட்டார். ஓரிரு மாணவர்களுக்கு இந்தக் கதை மூலமாக மாலதி டீச்சர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. அவர்கள் எழுந்து ஓரிரு வார்த்தைகள் சொன்னார்கள்.

""வெரிகுட்!'' என்று அவர்களைப் பாராட்டிய மாலதி டீச்சர், அனைத்து மாணவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாய் சொல்ல ஆரம்பித்தார்.

""இந்தக் கதைல வர்ற பூக்கள் மாதிரி நீங்களும் உங்களுக்குள் யார் பெரியவன்னு போட்டி போடுறீங்க! ஒரு சில பேரு தங்கள்கிட்ட இருக்குற விலையுயர்ந்த உடமைகளை வைச்சு அடுத்தவங்களை மட்டம் தட்ட நினைக்குறீங்க! சிலபேரு நல்லாப் படிக்குறதால மத்தவங்களை ஏளனமாப் பாக்குறீங்க. இன்னும் சிலபேரு வெறும் உடல் பலத்தால அடுத்தவங்களை அடக்கிடலாம்னு நினைக்குறீங்க. இப்படி நீங்க ஒவ்வொருத்தரும் உங்களுக்குள் நான்தான் பெரிய ஆளுன்னு போட்டி போடுறதுனால தேவையில்லாத சண்டை சச்சரவு வருது. யாராவது யாரைப் பத்தியாவது சதா காலமும் குறை சொல்லிக்கிட்டும், கோள் சொல்லிக்கிட்டும் இருக்கீங்க. இது ரொம்பத் தப்பு'' என்று சொல்லி சற்று இடைவெளி விட்ட மாலதி டீச்சர், மீண்டும் தொடர்ந்தார்.

""கடவுள் சொன்ன மாதிரி பூக்கள்ல எப்படி உயர்வு, தாழ்வு இல்லையோ அதே மாதிரி மாணவர்களாகிய உங்க மத்தியிலயும் உயர்வு, தாழ்வு கிடையாது. நீங்க ஒவ்வொருவரும் பூக்கள் மாதிரியே ஒவ்வொரு காரணத்துக்காக இந்தப் பூமியில படைக்கப்பட்டிருக்கீங்க! உங்கள்ல முதல் ரேங்க் வாங்குற தீபா ஒரு அழகான ரோஜான்னா, தன்னோட இனிமையான குரல்வளத்தால பரிசுகள் பல வாங்கிக் குவிக்குற ஜனனி ஒரு மணம் வீசும் மல்லிகை!

தடகளத்துல முத்திரை பதிச்சு பள்ளிக்கு பெருமை சேக்குற முத்து ஒரு செம்பருத்தினா, பொதுஅறிவு, இலக்கியம்னு புகுந்து கலக்குற சேகர் ஒரு சூரியகாந்தி! இப்படி நீங்க எல்லாரும் ஒவ்வொரு விதத்துல திறமைசாலியாத்தான் இருக்கீங்க. அதனால உங்க மத்தியில யார் பெரியவன்ங்குற அகங்காரம் தேவையில்லை. நீங்க செய்ய வேண்டியது எல்லாம் உங்களை கஷ்டப்பட்டு வளர்க்குற பெத்தவங்களும், உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்குற ஆசிரியர்களும் சந்தோஷப்படுற மாதிரி நல்லா படிச்சு சிறந்த மாணவனா வெளிவர்றதுதான்!'' என்றார் மாலதி டீச்சர். அவரே தொடர்ந்து பேசினார்.

""ஒரு தனி பூச்செடி நந்தவனம் ஆகாது. பல பூச்செடிகள் சேர்ந்து இருக்குறதுனாலதான் அது நந்தவனம் ஆகுது. அதே மாதிரி மாணவர்களாகிய நீங்க உங்க திறமைகளை மேம்படுத்தி நல்ல குடிமகனா வெளிவரும் போதுதான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். எப்படி நந்தவனத்தோட அழகுல மயங்கி எல்லாரும் திரும்பிப் பார்த்துட்டுப் போனாங்களோ அதே மாதிரி எழுச்சிமிக்க சமுதாயத்தை இந்த உலகம் திரும்பிப் பார்க்கும். என்ன நீங்க அத்தனை பேரும் உங்களுக்குள்ள சண்டை போடாம சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்குவீங்களா?'' என்று மாலதி டீச்சர் கேட்க, அனைத்து மாணவர்களும் ஒன்றாகச் சேர்ந்து கோரஸôக, ""கண்டிப்பா மிஸ்!'' என்று குரல் கொடுத்து ஆர்ப்பரித்தனர்.

குற்றம் புரிந்தவன் மனம்














சத்யபுரி அரசன் சத்யசந்தன் வெகு நேர்மையாகவும், நெறிதவறாமலும் ஆண்டு வந்தான். அவன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவனது ஒரே மகன் விஜயன். மதியுக மந்திரியின் மகன் மணவாளன். இருவரும் ஆத்ம நண்பர்கள். ஒருவரை ஒருவர் பிரியமாட்டார்கள். இளவரசன் விஜயன் கொஞ்சம் சோம்பேறி. ஆனால், மணவாளனோ அதிபுத்திசாலி. இருவருக்கும் பத்து வயது நிரம்பியது. அவர்களை தங்கள் குருகுல மகாராஜிடம் கல்வி பயில அனுப்ப வேண்டிய தருணம் வந்ததால், அரசன் சத்யசந்தன் பொதிகை மலைச்சாரலில் உள்ள குருகுல ஆஸ்ரமத்திற்கு விஜயனையும், மணவாளனையும் அழைத்துச் சென்று இருவருக்கும் எல்லா கலைகளையும் பயிற்சியளிக்க வேண்டினான்.

ஆஸ்ரம கொள்கைப்படி அவர்களின் படிப்பு முடிய பத்து ஆண்டுகள் ஆகும். அதுவரை அவர்கள் அரண்மனைக்குச் செல்ல முடியாது. மற்ற மாணவர்களைப் போலவே நடத்தப்படுவர். எவ்விதச் சலுகையும் கிடையாது.

இருவருக்கும் வேதம், சாஸ்திரம் மற்றும் போர்க்கலை, வாள் சண்டை, குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என்று எல்லா கலைகளிலும் பயிற்சி அளித்தார். எல்லாவற்றிலும் மணவாளனுக்கு நற்பெயர். எனவே, குருகுல மகாராஜ் விஜயனைக் கண்டித்து, மணவாளனை புகழ ஆரம்பித்தார். இதனால், விஜயனின் மனதில் பொறாமை தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

இப்படியாக பத்தாண்டுகள் உருண்டோடின. அரண்மனைக்குத் திரும்ப வேண்டிய காலம் நெருங்கியது. நன்கு பயின்ற மணவாளனை எல்லோரும் புகழ்ந்தனர். தன்னைப் பாராட்டவில்லையே என்ற ஏக்கம் விஜயன் மனதில் ஏற்பட்டது. ஆகவே, வஞ்சமாக மணவாளனை பழிவாங்க வேண்டுமென அவன் மனம் துடித்தது. இதையறியாத மணவாளன் எப்போதும் போல சகஜமாகப் பழகி வந்தான். விஜயனின் மனமாற்றத்தை அவன் உணரவில்லை.

ஒரு நாள் விஜயனும், மணவாளனும் படகு சவாரி செய்தனர். மணவாளனுக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது. இதுதான் தக்க சமயம் என்று நினைத்து, விஜயன் படகை ஒரு சுழலில் சிக்க வைத்து மூழ்கும் படி செய்தான். படகு கவிழ்ந்து இருவரும் நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். விஜயன் நீந்தி கரை சேர்ந்தான். தனக்கு நேர்ந்த கதிக்காக மணவாளன் குருமகாராஜை நினைத்து, தன்னைக் காப்பாற்ற வேண்டினான். நிஷ்டையில் இருந்த குருமகாராஜ் அதிர்ச்சியடைந்து, தன் வலிமையால் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தை உணர்ந்து இருவரும் பிழைத்துக் கொள்ள அருள்புரிந்தார்.

என்ன ஆச்சர்யம்! நதியில் அடித்துச் செல்லும் மணவாளனுக்கு அருகில் ஒரு பெரிய வாழை மரம் மிதந்து வந்தது. அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு கரை ஏறினான். அவனுக்கு விஜயன் செய்த சூழ்ச்சி தெரியாது. ஆகவே, நதியில் விழுந்த இளவரசன் விஜயனுக்கு என்னவாயிற்றோ என புலம்பிக் கொண்டு ஆஸ்ரமத்தை நோக்கி விரைந்தான்.

இதற்கு முன்பே நீந்தி வெளியேறிய விஜயன், தான் அவசரத்தில் இப்படி செய்து விட்டோமே என அவன் மனசாட்சி உறுத்தியது. ""ஆண்டவனே! மணவாளனைக் காப்பாற்று. என் குற்றத்தை மன்னிக்கவும்!'' என கதறிக் கொண்டே ஆஸ்ரமத்தை அடைந்தான்.

அவன் கதறி அழுவதைக் கண்ட குரு மகாராஜ், ""என்ன விஜயா... என்னவாயிற்று? ஏன் இப்படி புலம்புகிறாய்?'' என்று கேட்டார்.

""குருதேவா! நான் மகாபாவி. ஆத்திரத்தாலும், பொறாமையாலும் என் ஆத்ம நண்பனை இழந்து விட்டேன். அவன் மரணத்திற்கு நான்தான் காரணம். என்னையும் நதியில் தள்ளிக் கொன்றுவிடுங்கள். அவனின்றி நான் அரண்மனைக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்'' என்று கூறி தரையில் புரண்டு அழுதான்.

""விஜயா! உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள். மணவாளனுக்கு ஒன்றுமாகாது. அவன் விரைவில் வந்துவிடுவான். உள்ளே சென்று ஓய்வெடுத்துக் கொள்!'' என்று அனுப்பி விட்டார்.

அதேசமயம், மணவாளன் கதறிக் கொண்டு குருநாதர் காலில் விழுந்தான். ""குருதேவா! நான் என் இளவரசன் விஜயனை இழந்து விட்டேன். படகில் விபத்து ஏற்பட்டு நதியில் இருவரும் மூழ்கி விட்டோம். நான் தப்பித்துக் கொண்டேன். இளவரசைக் காப்பாற்றாத துரோகி நான். எனக்கு மரணதண்டனை நிச்சயம். எப்படி அரசரைச் சந்திப்பேன்'' எனக் கதறினான்.

மணவாளன் குரலைக் கேட்டதும், அரைதூக்கத்திலிருந்த விஜயன் எழுந்து வெளியே வந்து, ""மணவாளா! என் ஆருயிர் நண்பனே'' என ஆரத்தழுவிக் கொண்டு, தான் அறியாமல் செய்த குற்றத்தைக் கூறி மன்னிக்க வேண்டினான்.

மணவாளனும், ""இளவரசே! தாங்கள் நல்ல மனம் படைத்தவர். விதி நம்மை சதி செய்து விட்டது. குருமகாராஜ் அருளால் பிழைத்துக் கொண்டோம். அவர்தான் நம்மைக் காப்பாற்றினார். அவருக்கு நன்றி சொல்லி வணங்குவோம்'' என்றான்.

குருமகாராஜ் இருவரையும் கட்டி அணைத்து, ""இளவரசன் விஜயன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து விட்டான். குற்றம் புரிந்தவன் மனம் பட்டபாடு இருக்கிறதே, அதுதான் அவனுக்குத் தண்டனை. உங்கள் இருவரின் நட்பும் மேலானது. உங்கள் குருகுலவாசம் முடிந்தது. நாளை காலை எல்லோரும் அரண்மனைக்குச் செல்வோம். புறப்படுவதற்கு தயாராகுங்கள்'' என்றார்.

மறுநாள், எல்லோரும் சத்யபுரியை அடைந்தனர். பத்தாண்டுகள் கடந்து இருபது வயது நிறைந்த போர் வீரர்களாக விஜயனும், மணவாளனும் வருவதை அறிந்த அரசன் சத்யசந்தன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

சத்யசந்தன் குருமகாராஜிடம், ""சுவாமி! தங்கள் அருளால் இருவரும் நன்கு கல்வி பயின்று வந்துள்ளனர். எனவே, ஒரு நல்ல நாளில் விஜயனுக்கு முடிசூட்டி, மணவாளனை மந்திரியாக்கி விட்டு, நாங்கள் தங்களோடு ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்ய விரும்புகிறோம். தாங்கள்தான் முடிசூட்டும் விழாவை நடத்தித் தர வேண்டும்'' என கேட்டுக் கொண்டான்.

இதைக் கேட்ட விஜயன், ""தந்தையே! என்னைவிட மணவாளனே எல்லாவற்றிலும் மேன்மையானவன். ஆகவே, அவன்தான் அரச பதவிக்கு உகந்தவன். அவனுக்கு முடிசூட்டுங்கள். நான் எல்லா விதத்திலும் அவனுக்கு துணைபுரிவேன்'' என்றான்.

அரசருக்கு விஜயனின் திடீர் மனமாற்றம் அதிர்ச்சியளித்தது. அதைப் புரிந்து கொண்ட குருமகாராஜ், ""சத்யசந்தா! விஜயன் சொல்வது முற்றிலும் சரியே. குருகுல வாசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள்தான் அதற்குக் காரணம். ஆகவே, உன் ராஜ்யத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து, இருவரையும் ஒவ்வொரு பகுதிக்கு அரசனாக்கி விடு'' என ஆசி கூறினார். அதன்படி, இருவருக்கும் முடிசூட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட சிங்கபுரி நாடு இருவரின் ஆட்சியில் மேலும் சிறப்புற்றது.

கலாநிகேதன் பாலு

லில் சிக்க வைத்து மூழ்கும்படி செய்தான். படகு கவிழ்ந்து இருவரும் நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். விஜயன் நீந்தி கரை சேர்ந்தான். தனக்கு நேர்ந்த கதிக்காக மணவாளன் குருமகாராஜை நினைத்து, தன்னைக் காப்பாற்ற வேண்டினான். நிஷ்டையில் இருந்த குருமகாராஜ் அதிர்ச்சியடைந்து, தன் வலிமையால் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தை உணர்ந்து இருவரும் பிழைத்துக் கொள்ள அருள்புரிந்தார்.

என்ன ஆச்சர்யம்! நதியில் அடித்துச் செல்லும் மணவாளனுக்கு அருகில் ஒரு பெரிய வாழை மரம் மிதந்து வந்தது. அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு கரை ஏறினான். அவனுக்கு விஜயன் செய்த சூழ்ச்சி தெரியாது. ஆகவே, நதியில் விழுந்த இளவரசன் விஜயனுக்கு என்னவாயிற்றோ என புலம்பிக் கொண்டு ஆஸ்ரமத்தை நோக்கி விரைந்தான்.

இதற்கு முன்பே நீந்தி வெளியேறிய விஜயன், தான் அவசரத்தில் இப்படி செய்து விட்டோமே என அவன் மனசாட்சி உறுத்தியது. ""ஆண்டவனே! மணவாளனைக் காப்பாற்று. என் குற்றத்தை மன்னிக்கவும்!'' என கதறிக் கொண்டே ஆஸ்ரமத்தை அடைந்தான்.

அவன் கதறி அழுவதைக் கண்ட குரு மகாராஜ், ""என்ன விஜயா... என்னவாயிற்று? ஏன் இப்படி புலம்புகிறாய்?'' என்று கேட்டார்.

""குருதேவா! நான் மகாபாவி. ஆத்திரத்தாலும், பொறாமையாலும் என் ஆத்ம நண்பனை இழந்து விட்டேன். அவன் மரணத்திற்கு நான்தான் காரணம். என்னையும் நதியில் தள்ளிக் கொன்றுவிடுங்கள். அவனின்றி நான் அரண்மனைக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்'' என்று கூறி தரையில் புரண்டு அழுதான்.

""விஜயா! உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள். மணவாளனுக்கு ஒன்றுமாகாது. அவன் விரைவில் வந்துவிடுவான். உள்ளே சென்று ஓய்வெடுத்துக் கொள்!'' என்று அனுப்பி விட்டார்.

அதேசமயம், மணவாளன் கதறிக் கொண்டு குருநாதர் காலில் விழுந்தான். ""குருதேவா! நான் என் இளவரசன் விஜயனை இழந்து விட்டேன். படகில் விபத்து ஏற்பட்டு நதியில் இருவரும் மூழ்கி விட்டோம். நான் தப்பித்துக் கொண்டேன். இளவரசைக் காப்பாற்றாத துரோகி நான். எனக்கு மரணதண்டனை நிச்சயம். எப்படி அரசரைச் சந்திப்பேன்'' எனக் கதறினான்.

மணவாளன் குரலைக் கேட்டதும், அரைதூக்கத்திலிருந்த விஜயன் எழுந்து வெளியே வந்து, ""மணவாளா! என் ஆருயிர் நண்பனே'' என ஆரத்தழுவிக் கொண்டு, தான் அறியாமல் செய்த குற்றத்தைக் கூறி மன்னிக்க வேண்டினான்.

மணவாளனும், ""இளவரசே! தாங்கள் நல்ல மனம் படைத்தவர். விதி நம்மை சதி செய்து விட்டது. குருமகாராஜ் அருளால் பிழைத்துக் கொண்டோம். அவர்தான் நம்மைக் காப்பாற்றினார். அவருக்கு நன்றி சொல்லி வணங்குவோம்'' என்றான்.

குருமகாராஜ் இருவரையும் கட்டி அணைத்து, ""இளவரசன் விஜயன் தான் செய்த குற்றத்தை உணர்ந்து விட்டான். குற்றம் புரிந்தவன் மனம் பட்டபாடு இருக்கிறதே, அதுதான் அவனுக்குத் தண்டனை. உங்கள் இருவரின் நட்பும் மேலானது. உங்கள் குருகுலவாசம் முடிந்தது. நாளை காலை எல்லோரும் அரண்மனைக்குச் செல்வோம். புறப்படுவதற்கு தயாராகுங்கள்'' என்றார்.

மறுநாள், எல்லோரும் சத்யபுரியை அடைந்தனர். பத்தாண்டுகள் கடந்து இருபது வயது நிறைந்த போர் வீரர்களாக விஜயனும், மணவாளனும் வருவதை அறிந்த அரசன் சத்யசந்தன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

சத்யசந்தன் குருமகாராஜிடம், ""சுவாமி! தங்கள் அருளால் இருவரும் நன்கு கல்வி பயின்று வந்துள்ளனர். எனவே, ஒரு நல்ல நாளில் விஜயனுக்கு முடிசூட்டி, மணவாளனை மந்திரியாக்கி விட்டு, நாங்கள் தங்களோடு ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்ய விரும்புகிறோம். தாங்கள்தான் முடிசூட்டும் விழாவை நடத்தித் தர வேண்டும்'' என கேட்டுக் கொண்டான்.

இதைக் கேட்ட விஜயன், ""தந்தையே! என்னைவிட மணவாளனே எல்லாவற்றிலும் மேன்மையானவன். ஆகவே, அவன்தான் அரச பதவிக்கு உகந்தவன். அவனுக்கு முடிசூட்டுங்கள். நான் எல்லா விதத்திலும் அவனுக்கு துணைபுரிவேன்'' என்றான்.

அரசருக்கு விஜயனின் திடீர் மனமாற்றம் அதிர்ச்சியளித்தது. அதைப் புரிந்து கொண்ட குருமகாராஜ், ""சத்யசந்தா! விஜயன் சொல்வது முற்றிலும் சரியே. குருகுல வாசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள்தான் அதற்குக் காரணம். ஆகவே, உன் ராஜ்யத்தை இரண்டு பாகங்களாகப் பிரித்து, இருவரையும் ஒவ்வொரு பகுதிக்கு அரசனாக்கி விடு'' என ஆசி கூறினார். அதன்படி, இருவருக்கும் முடிசூட்டப்பட்டது. பிரிக்கப்பட்ட சிங்கபுரி நாடு இருவரின் ஆட்சியில் மேலும் சிறப்புற்றது.

தானத்தில் சிறந்தவர் கர்ணனே

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.

உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.

குட்டித் தோழி

இரயில் அரை மணி நேரம் தாமதம். எந்த ரயில் சரியான நேரத்திற்கு வருகிறது? இரயில் நிலையத்தில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஞாயிற்றுக்கிழமை அதிக கூட்டம். காட்பாடியில் இருந்து பெங்களூர் செல்ல எப்படியும் நான்கு மணி நேரம் பிடிக்கும். எப்படி நேரத்தை செலவு செய்வது? புதிதாய் வாங்கிய புத்தகம் இரண்டையும் வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஹிக்கின்போத்தம்ஸ் கடை எதிர் பிளாட்பாரத்தில் தான் இருந்தது. அங்கு சென்றுவர சோம்பேறித்தனம்!

"டங் டங். பயணிகள் கவனத்திற்கு, சென்னையில் இருந்து பங்காருப்பேட்டை வழியாக பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஒன்றாவது பிளாட்பாரத்தில் வந்து சேரும்."

என்னுடைய சிறு வயதில், 'எப்படி இந்த அக்கா வார்த்தை தவறாமல், ஒரு தவறில்லாமல் அறிவிக்கிறாங்க'ன்னு அதிசயித்தது உண்டு.

வண்டி வந்தது. என் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்காருவதற்குள் பெரும் சிரமமாகிவிட்டது. எதிரிலே மூன்று நாள் தாடியுடன் முப்பத்தைந்து வயதான கணவன், முப்பதை சற்றே கடந்திருக்கும் மனைவி மற்றும் எல்லாம் வாழ்ந்து முடிந்தது போன்ற தோற்றத்தில் ஒரு பெரியவர். இரயிலின் சத்தத்தைவிட அதிகமாக அருகே அழுகுரல். குழந்தைகளின் சண்டை. சண்டையிட்டது ஒரு ஆறு வயது பெண்குழந்தையும் நான்கு வயது சிறுவனும்.

"விடுடா விடு" ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளுக்காக சண்டை. "மம்மி அந்தப் பையன் பீப்பீல எச்சி வெச்சிட்டான்". லேசான சிணுங்கல் அந்தப் பெண் குழந்தையிடம்.

"அமுதா.. இங்க வா. தம்பி தானே.. வா வந்து தாத்தாகிட்ட உட்கார்." அப்போது தான் தெரிந்தது அந்தக் குழந்தை எதிரே அமர்ந்திருந்த 35-30ன் குழந்தை என்று.

"தா அதை முதலில்; பையில் வைக்கிறேன். அமைதியா எங்காச்சும் இருக்கியா நீ?" இது அமுதாவின் அப்பா.

ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. பயணம் முழுவதும் அமுதாவின் அட்டகாசங்களை மட்டுமே நோட்டமிட்டபடி நான். மடிக்கு மடி தாவினாள். தாத்தாவிடம் கொஞ்சினாள். அம்மாவிடம் அடாவடித்தாள். அந்தச் சிறுவனிடம் "உன் பேச்சு டூ" என்றாள். அப்பாவிடம் அடக்கமாக சில நிமிடம். என் மடிக்கும் வந்து சேர்ந்தாள்.

"பாப்பா பேரு என்ன?"

"பாப்பாவா? யாரு பாப்பா? I am a big girl"

"ஓ அப்படிங்களா மேடம்? சொல்லுங்க உங்க பேரு என்ன?

"அமுதா.. உங்க பேரு என்ன?" மழலைத் தமிழில் கேட்டாள்.

தமிழே அழகு! அதுவும் மழலைத்தமிழ் அழகோ அழகு..

"விழியன்"

"குட் நேம். ஹலோ விழியன். ஹவ் டு யு டு?" என் கையைக் குலுக்கினாள்.

அடடா எனக்கு இது தோன்றாமல் போச்சே. பக்கத்தில் கடன் வாங்கிய வார இதழை மூடி வைத்து விட்டேன். அடுத்த ஒரு மணி நேரம் என்னைப் படாதபாடு படுத்திவிட்டாள். கேள்வி மேல் கேள்வி. "நீங்க எங்க வேலை செய்யறீங்க. என்ன கேம்ஸ் விளையாடுவீங்க? ஏன் இவ்வளவு குண்டா இருக்கீங்க? எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" சலிக்காமல் பதில் தந்தேன்.

ஒரு கட்டத்தில் அவள் கேள்விகளில் இருந்து தப்பிக்க அவளிடம் சின்ன விளையாட்டு விளையாடினேன்.

"அமுதா இது என்ன?"

"இது கூட எனக்குத் தெரியாதா? சர்க்கிள்"

"சரி. இந்த வட்டம் மாதிரி என்ன என்ன பொருள் உனக்குத் தெரியும்? சொல்லு பார்ப்போம்."

"இட்லி, தோசை, அம்மா வளையல், நிலா, சன், பாட்டி பொட்டு, ம்ம்ம் காயின், என் டாலர்... .." எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்தவள் கூட்ஸ் வண்டிபோல சொல்லிக்கொண்டே போனாள்.

அதன் பின்னர் பாட்டு ஒன்றை சொல்லித் தந்தேன். அவளும் ஆடிக்கொண்டே பாட்டு பாடி என்னையும் ஆட வைத்தாள். பேசிப் பேசி என் சக்தியே குறைந்துவிட்டது. ரயில்வே கேண்டீனில் இருந்து பஜ்ஜி போண்டா வந்தது. ஒரு ப்ளேட் கொடுக்கச் சொன்னேன். மூன்று போண்டா பதினாறு ரூபாய். ஒன்றை எடுத்து அமுதாவிடம் கொடுத்தேன். அவள் அம்மாவைப் பார்த்து சாப்பிடட்டுமா என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன்.

எதிர்பாராத பதில்!

"அங்கிள். இது பேட் ஆயில்ல (bad oil) செய்து இருப்பாங்க. ஸ்டொமக் ப்ராப்ளம் வரும். நீங்க இப்பவே குண்டா இருக்கீங்க. இன்னும் சாப்பிட்டா அவ்வளவு தான்"

சுரீர் என்று மண்டை மீது அடித்தது போல இருந்தது. கேண்டீன் சர்வர் வேகமாக நடையைக் கட்டினார். மிகவும் நெருடலாகிவிட்டது. வாயில் வைத்ததை உண்டுவிட்டு மீதி இருந்த இரண்டு போண்டாவை அந்த வழியே யாசகம் கேட்டு வந்த ஒரு வயதான பாட்டியிடம் கொடுத்தேன்.

அமுதா என்னைப் பார்த்து அநாயசமாக, "அவங்க ஒடம்பு கெட்டுப்போனா பரவாயில்லையா?" எனக் கேட்டுவிட்டு அவள் அம்மாவின் மடியினில் குடிபெயர்ந்தாள்.

என்ன செய்வதென தெரியாமல் கண்ணயர்ந்தேன். குப்பம் ரயில் நிலையத்தில் ஜன்னலோர சீட் காலியானது. அமுதா மீண்டும் வந்து மடி மீது உட்கார்ந்து கொண்டாள்.

அவள் வகுப்புக் கதைகளைக் கூற ஆரம்பித்தாள். தன் தோழி ஜெனி·பர் வைத்திருக்கும் பென்சில் பாக்ஸ் முதல் அவள் வகுப்பு ஆசிரியை வரை ஓயாமல் பேசினாள். எத்தனை உன்னிப்பான பார்வைகள், நினைவுகள், கவனிப்புகள். அவள் பேசி எனக்குத் தாகம் எடுத்தது.

"அமுதா காபி, டீ, பால் ஏதாச்சும் குடிக்கறியா, இல்ல இதுக்கும் ஏதாச்சும் வெச்சிருக்கியா?"

"நீங்க குடிங்க"

டீ குடித்தேன். பிளாஸ்டிக் கப்பை கீழே போட வந்தேன், அமுதாவின் பார்வையில் ஏதோ இருப்பது புரிந்தது.

"கீழே போடாதே" என்ற எச்சரிக்கை கண்களாலே. நானும் என்ன செய்ய என்று கேட்டேன்.

உடனே தன் அம்மா அருகிலிருந்த கவரை எடுத்து நீட்டினாள். அதில் ஏற்கெனவே 4-5 கப்புகளும், பிஸ்கட் கவர்களும் இருந்தன. வார்த்தைகள் தேவையில்லை அவள் செய்கைக்கு. எத்தனை பாடங்களை சொல்லாமல் சொல்லித் தருகிறாள்.

அள்ளி அணைத்தபடி "யாருடா உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தது?" ஆனந்த ஆச்சரியத்தில் நான். அவள் முகத்தில் புன்னகை. அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். அப்பாவிற்கு சந்தோஷம். மெல்லத் தலையாட்டியபடி என் காதருகே வந்து "எங்க புவனா மிஸ்" என்று ரகசியம் பேசினாள்.

இதன் நடுவே, காட்பாடியருகே ஒரு சிறுவனிடம் சண்டையிட்டாளே அந்தக் குடும்பம் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கியது. அமுதா ஓடிச்சென்று அந்தப் பீப்பீயை அவனுக்குப் பரிசளித்து வந்தாள்.

"உனக்கு இதே தொழிலாப் போச்சு". அமுதாவின் அப்பா தன் பணத்தை இப்படியே விரயப்படுத்துகிறாள் என்று வருத்தப்பட்டார்.

"அங்கிள், நாம ஏதாச்சும் கேம் விளையாடலாமா?" என்றாள்.

நான் "இப்போ ஐந்து கண்ணாடிப் பொருள்களை சொல்லு பார்ப்போம்" என்றேன்.

"உங்க மூக்குக் கண்ணாடி" விழுந்து விழுந்து சிரித்தாள் கள்ளமில்லாமல். "ஜன்னல் கண்ணாடி" "கிஸான் பாட்டில்" "அப்புறம்..ம் ம்.. அதோ லைட் மேல கண்ணாடி" "அங்ங். அப்பா குடிப்பாரே அந்த old monk பாட்டில்.. .." நிசப்தம். எங்கள் உரையாடலை சுற்றி இருந்த அனைவரும் ரசித்துக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஆச்சர்யம்.

படால்..படால் என்று அமுதாவின் கன்னம் பதம் பார்க்கப்பட்டது. அவளைத் தன் பக்கம் இழுத்தார் அவள் அப்பா. "சார்.." என்று நான் தடுக்க..முறைத்தார்.

அமுதா அழுது அழுது தூங்கிவிட்டாள். கலகலவென இருந்த இடம் காலியானது போல இருந்தது.

கே.ஆர்.புரத்தில் வண்டி நின்றது. அந்தக் குடும்பம் இறங்கியது. இன்னமும் அம்மா தோள்மீது தூங்கியபடி அமுதா. பத்தடி நடந்த பின்னர், மெல்லக் கண்களைத் திறந்தவள் மெல்லிய சிரிப்பை என் மீது வீசிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.

அந்தக் குட்டித் தோழியை இனி எப்போது காண்பேனோ என்ற ஏக்கம் மனதை நிறைத்தது.

கஞ்ச மகா பிரபு

பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.

எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, "டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?'' என்று கத்தினார்.

நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். "ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,'' என்றான்.

"முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,'' என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.

குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.

அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.
கேசவனை பார்த்தக் கொல்லன், "உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,'' என்றான்.

"என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?'' என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.

"எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,'' என்றான் அவன்.

வேறு வழியில்லாத ஜம்பு, "சரி'' என்றார்.

சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.

"இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,'' என்றான் அவன்.
நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. "இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்' என்று நினைத்தார் அவர்.

அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.

கொல்லனைப் பார்த்து, "இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,'' என்று மிரட்டினார்.

அவருக்கு அஞ்சிய அவன், "இனி நான் இங்கு வரமாட்டேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, "இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,'' என்றார்.

"ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,'' என்றான் அவன்.

"நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?'' என்றார் அவர்.

"ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

"பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,'' என்றான் அவன்.

அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.

"நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,'' என்றார்.

பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது.
உதவியாளைப் பார்த்து, "ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,'' என்றார்.

உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார்.

களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். "ஐயா! என்னால் முடியவில்லை,'' என்றான்.

உழவனைப் பார்த்து அவர், "இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,'' என்றார்.

பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.

நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.
உதட்டைப் பிதுக்கிய அவர், "என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

"சரி கோடரியே செய்து தாருங்கள், '' என்றான் அவன்.
மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.

சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.

மிகவும் சிறியதாக இருந்தது அது. "இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

"ஏதாவது செய்யுங்கள்,'' என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.

பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், "நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார்.

நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், "எதையாவது செய்து தாருங்கள்,'' என்றான்.

அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், "இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,'' என்று அதை உழவனிடம் தந்தார்.

"நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,'' என்றார்.

"ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,'' என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.

"இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,'' என்றான் அவன்.

மகிழ்ச்சி அடைந்த அவர், "நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,'' என்றார்.

உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.

வண்டியோட்டியைப் பார்த்து, "நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் "போதுமா' என்று கேட்பான். நீ உடனே, "போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.

அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.

வலி பொறுக்க முடியாத அவர், "ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,'' என்று அலறினார்.

வெளியே இருந்த வண்டியோட்டி, "போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,'' என்று உரத்த குரலில் கத்தினான்.

"கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,'' என்றான் உழவன்.
எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.

உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.
வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.

"அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?"

"டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,'' என்றுஅலறினார் செல்வந்தர்.

நயவஞ்சக நரி

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?'' என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா... வாங்க... கூட யாரு? மன்னியா?'' என்று கேட்டது.


“ஆமாம்!'' “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!'' என்று கேட்டது.

“ஆமாம்...! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்...! ஏன் கேட்கிறீர்?'' என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!'' என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது... முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!'' என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?'' என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!'' என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!'' என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை... இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்... கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!'' என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!'' என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்... பேஷ் பேஷ்...

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?'' என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!'' என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?'' என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே... கவலையே படாதே...! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்...! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்...! நானிருக்க பயமேன்?'' என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் "கர், கர்' என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்...! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்... உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!'' என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே...! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!'' என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.